Sunday, April 11, 2010

அரண்..

கோயில்..
செருப்புகளை வெளியே விட்டு
உள்ளே போகிறது அழுக்கு.



மனிதன்..
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….



மானம்..உன் கோவணம் அவிழ்க்கப்பட்டதா?
அவன் கைகளை வெட்டு
கெஞ்சி கோவணம் கட்டாதே
அம்மணமாகவே போராடு...



அறுவடை..திரைப்படச்சுவரொட்டியை
தின்றகழுதை கொழுத்தது
பார்த்த கழுதை புழுத்தது..



மந்தை..மேடை
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…நீ என்றேன்
கைதட்டினான்...



தாஜ்மஹால்..காதலி புதைக்கப்படட இடம் காட்டுகிறாய்
காதலை புதைத்த இடம் காட்டு
எங்கே ஷாஜஹானால் கசக்கி எறியப்பட்ட
அந்தப்புரப்பெண்களின் கறுப்புகல்லறைகள்?....



அரண்..என் வலகையில் ஐந்துவிரல்கள்
உண்ணவும் வணங்கவும் மட்டுமல்ல
அறையவும்தான்....



காசி



No comments: